அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நர்மதா தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்; அதை வெளிப்படுத்தாமல் ஆண் ஊழியர்களுக்கு இணையாக பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாக மனுவில் கூறப்பட்டது. தமிழகத்தில் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை இல்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டார்.
கர்நாடகா, கேரளா, பீஹார், ஒடிசா போன்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் இருப்பதாகவும், இது சலுகை அல்ல; பொதுச் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நல நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவில் உயர்நிலைக் குழு அமைத்து, முழு சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு வழக்கை விசாரித்தது. அரசு தரப்பில், விதிகளை உருவாக்கவும் அதை தொழிலாளர் நீதிமன்ற விதிகளில் சேர்க்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு அமைத்த குழுவின் உறுப்பினர்கள் விவரங்களை ஆகஸ்ட் 24க்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.





