புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் பதிவிலிருந்த ஒரு வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில் முழுமையான திருப்தி இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 23 அன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு பின்னர் பேஸ்புக்கிலும் பகிரப்பட்ட அந்த வீடியோ, இளம் தலைமுறையினருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், ‘நீட்’ இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் உறுதி அளித்திருந்தார். இந்த பதிவு பின்னர் பேஸ்புக்கில் இருந்து திடீரென நீக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான உள்ளடக்கம் ஏன் நீக்கப்பட்டது என்பதைக் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மெட்டாவின் உலகளாவிய பொது கொள்கை தலைவருக்கு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
அமைச்சக செயலாளர் கிருஷ்ணன், பிரதமரின் சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான தகவல் தற்காலிகமாக நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இது நடந்து இருக்கக்கூடாது என்றும் கூறினார். மெட்டா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை நல்ல தொடக்கமாக வரவேற்றாலும், அதன் விளக்கம் அமைச்சகத்துக்கு போதுமானதாக இல்லை என தெரிவித்தார். தவறு எப்படி நடந்தது என்பதை அறிய கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதுடன், விரிவான தொழில்நுட்ப ஆலோசனையும் நடத்தப்படும் என்றார்.
மேலும், இந்தியாவில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் கணக்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் பதிவிடப்படும் உள்ளடக்கங்கள் சிறு காரணங்களுக்காகவோ அல்லது அல்காரிதம் தவறுகளாலோ நீக்கப்படாது என மெட்டாவிடம் இருந்து உத்தரவாதம் கோரப்படும் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், வாட்ஸ்அப்பில் ‘பயனர் முறை’ அறிமுகம் தொடர்பாக மெட்டா அளித்த விளக்கம் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.





