திண்டுக்கல் மாவட்டம் பழநியில், தண்டபாணி சுவாமி மடத்திற்கு தொடர்புடைய நிலம் குறித்த மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களின் பெயரில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை தொடர்புடைய முருகதாஸ் உள்ளிட்ட பலரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் கோவில் நிர்வாகம், வருவாய் துறை, பதிவுத்துறை சார்ந்த அதிகாரிகளிடமும் விளக்கம் பெறப்பட்டது.
நீதிமன்ற வழக்கு, பத்திரப்பதிவு நடைமுறைகள், விற்பனையாளர், பயனாளி, சாட்சிகள், புரோக்கர், எழுத்தர், பராமரிப்பு மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தொடர்புடையவர்களிடம் இதுவரை 82 பேரிடம் வாக்குமூலம் பெற்று ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகியோரை செவ்வாய்க்கிழமை சிபிசிஐடி கைது செய்தது. மோசடி தொடர்பான விவரங்களைத் தெளிவுபடுத்த அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் கூறினர்.





