நாடு முழுதும் கடந்த ஐந்தாண்டுகளில் பதிவான இணையவழி நிதி மோசடி புகார்களின் அடிப்படையில் ரூ.11,158 கோடி காப்பாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், மோசடிகளை உடனடியாக புகார் அளிக்கவும், மோசடிக்காரர்கள் பணத்தை எடுத்துச் செல்லாமல் தடுக்கவும் 2021ல் “குடிமக்கள் நிதிசார் இணைய மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு” தொடங்கப்பட்டதாக கூறினார். அந்த அமைப்பு தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு ஜூன் 30 வரை 32.80 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டு, அதன்மூலம் ரூ.11,158 கோடி பாதுகாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) மற்றும் அந்த மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, 2023 முதல் 2025 வரை 50.11 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ரூ.7,788 கோடி முடக்கப்பட்டதாகவும், ரூ.132 கோடி மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, இணைய குற்றவாளிகளின் அடையாள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு 2024ல் “சந்தேகத்திற்குரியோர் பதிவேடு” தொடங்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் மூலம் 32.08 லட்சம் போலி வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டதுடன், ரூ.25,698 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டதாகவும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.