டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது பயங்கரவாதத்திற்கு துணைபோனதாக குற்றம் சாட்டி, அவரை ‘தேடப்படும் குற்றவாளி’ என ரஷ்யா அறிவித்து, சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் குற்றச்சாட்டுப்படி, நாசவேலை, பயங்கரவாதச் செயல்கள், படுகொலைகள் மற்றும் இணையவழி மோசடிகளைத் திட்டமிட பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சேனல்கள் மற்றும் உரையாடல்களை டெலிகிராம் நிர்வாகம் அகற்றவில்லை. மேலும், உக்ரைன் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் இத்தகைய உள்ளடக்கங்களை தீவிரமாக பயன்படுத்தியதாகவும் ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.

துரோவ் ஏற்கனவே ரஷ்யாவை விட்டு வெளியேறி தற்போது பிரான்சில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, குற்றவியல் விசாரணை வரம்புக்குள் வழக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான செய்தியனுப்பும் செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் இருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தன்னுக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், டெலிகிராமை கட்டுப்படுத்த போலியான காரணங்களை அதிகாரிகள் முன்வைப்பதாகவும் துரோவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.