தமிழகத்தில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த ஆறு வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுவதில்லை; நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையர் உட்பட ஐந்து பணியிடங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக இருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, ஓய்வு காரணமாகவே காலியிடங்கள் ஏற்பட்டதாகவும், தேர்வுக் குழு அமைக்கப்பட்டு நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தது. நியமனங்களை முழுமையாக முடிக்க மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரியது.

ஆனால், தகவல் ஆணையங்கள் செயலிழப்பது மக்களின் உரிமையை பாதிக்கும் எனக் கூறிய அமர்வு, மூன்று மாத அவகாசத்தை மறுத்தது. ஆறு வாரங்களுக்குள் நியமன பணிகளை முடித்து சான்றிதழ் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.