மதுரை: தமிழகத்தில் 15 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் (வி.சி.) பணியிடங்கள் காலியாக இருப்பதால் உயர்கல்வி நிர்வாகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது துணைவேந்தர் இல்லாத பல்கலைகளில் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, கோவை பாரதியார் பல்கலை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை, வேலூர் திருவள்ளுவர் பல்கலை, சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலை, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

அடுத்த மாதம் காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

துணைவேந்தர் மட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட பல பல்கலைகளில் பதிவாளர், தேர்வாணையர், முதல்வர், இயக்குநர் போன்ற முக்கிய உயர்பதவிகளும் ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலை நிர்வாகத்திற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ‘கன்வீனர்’ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பெரும்பாலும் சென்னையிலிருந்தே நிர்வாகத்தை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உயர்பதவிகளில் பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் ‘சீனியாரிட்டி’ தொடர்பான பிரச்னைகள் உருவாகி கல்விச் சூழல் ஆரோக்கியமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆராய்ச்சி பிரிவு நடவடிக்கைகளும் முடங்குவதாக சர்ச்சை இருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். துணைவேந்தர் நியமனத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்றும், பல்கலைகளின் வேந்தர் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 29 அன்று விசாரணைக்கு வருவதால் அதில் தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவரலாம் என்றும் அவர்கள் கூறினர்.