காவிரி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதை கூறினார்.

காவிரியில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு தமிழகத்தின் கோரிக்கை இருமுறை நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் சிவகுமார் குறிப்பிட்டார். தற்போதைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தியதாகவும், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

பெங்களூரு திரும்பிய பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இதுகுறித்து பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சில விஷயங்களை நேரில் வந்து பேச தமிழக தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும், தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதுடன் தொலைபேசியிலும் பேசியதாகவும் சிவகுமார் கூறினார்.

வருகை தரும் தரப்பை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்கு சேர வேண்டியதை வழங்குவதும் கர்நாடகாவின் கடமை என கூறிய அவர், பேச்சுவார்த்தைக்காக வருமாறு அழைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருப்பதாகவும், விளக்கமளிக்க வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.