புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ளவர் என்றும், சமீபத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடமும் மன்னிப்பு கேட்டதாகவும் பாஜ தெரிவித்துள்ளது.

டில்லியில் நிருபர்களிடம் ராகுல், “எந்த பாஜ தலைவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று கூறியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்த பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, லோக்சபாவில் ராகுலின் பேச்சு குறித்து பாஜவின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

அமித் ஷாவின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக ராகுல் கூறியதாக பத்ரா குற்றம்சாட்டினார். இதை மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்புகளில் மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “மத்திய உள்துறை அமைச்சர் பேசுவதை கேட்டேன்” என்ற ராகுலின் கூற்று எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பிய பத்ரா, ரபேல் விவகாரத்தில் மனோகர் பாரீக்கர் மற்றும் சுஷ்மா சுவராஜ் குறித்து முன்பும் பொய் கூறியதாக குற்றம்சாட்டினார். ராகுலிடம் ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.