பெர்லினில் இருந்து வெளியான தகவலின்படி, 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான அதிக செலவுகள், சீனாவுடனான கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்ற காரணங்களால் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதே சூழலில் வோக்ஸ்வேகன், மெர்சிடீஸ்-பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஊழியர் குறைப்புக்கான ஒப்பந்தங்களை ஏற்கனவே மேற்கொண்டுள்ளன.
முனிச் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்டபுள்யூ நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ஜெர்மனியில் மேற்கொள்ளப்படும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை 2027க்குள் நிறைவேற்றப்பட உள்ளது.
தொழிலாளர் நலச்சங்கத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு பிரிவுகளை இலக்காகக் கொண்டு பணியிடக் குறைப்பு செய்யப்படுவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். உற்பத்திப் பிரிவுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், பிஎம்டபுள்யூ நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளது.





