2022 கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கைத் தொடர்ந்து, பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக தமிழகம், ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 16 இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு 2022 அக்டோபர் 23 அன்று கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் முக்கிய சதித் திட்டக்காரராக குறிப்பிடப்படும் ஜமேஷா முபீன் உயிரிழந்தார். வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (NIA) மாற்றப்பட்டது. NIA வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில், பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து நிதி தொடர்பான தடத்தை ஆராய்ந்து வருகிறது.
அமலாக்கத்துறை கூறுகையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக முபீன் இரண்டு வழிகளில் பணம் திரட்டியதாக சந்தேகம் உள்ளது. கோவிட் தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கியதும், கோவை அரபிக் கல்லூரிக்கான நன்கொடை என கூறி பணம் வசூலித்ததும் இதில் அடங்கும் என தெரிவித்தது.
மேலும், முபீன் உள்ளிட்ட 12 பேர் அந்த அரபிக் கல்லூரி தொடர்பான வகுப்புகளில் ஆன்லைனிலும் நேரடியாகவும் பங்கேற்றதாகவும், ஜமீல் பாஷா என்ற நபர் அவர்களை வழிநடத்தியதாகவும் ED தெரிவித்தது. பின்னர் அவர்கள் தீவிரவாதக் கொள்கையில் மூளைச்சலவை செய்யப்பட்டு ஐஎஸ் அமைப்பின் முறையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.





