தேசிய அளவிலான அரசு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை கடுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை கசிய விடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வழிவகுக்கும் வகையில் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மசோதாவை மேலவையில் தாக்கல் செய்தார். லோக்சபாவில் நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, இடையூறுகள் இருந்தபோதும் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாப்பதில் அரசின் உறுதியை இந்த மசோதா மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார். ராஜ்யசபாவில் மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





