திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்படும் 213 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்குச் சொந்தமான 218.41 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டாம் என, கோவில் செயல் அலுவலர் திருப்பூர் சார் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 2024ஆம் ஆண்டு தனி நீதிபதி, செயல் அலுவலரின் கடிதத்தை ரத்து செய்து, சண்முகசுந்தரத்தின் நிலத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கினார். அந்த உத்தரவை எதிர்த்து 2025ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தனி நீதிபதி உத்தரவில், கடிதத்தை முழுமையாக ரத்து செய்தது சரியல்ல என கோவில் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.

அதை ஏற்ற அமர்வு, சார் பதிவாளருக்கு அனுப்பப்பட்ட கோவில் செயல் அலுவலரின் கடிதம் சட்டப்படி செல்லத்தக்கது எனக் கூறி, கோவில் நிலத்தில் 213 ஏக்கருக்கு பத்திரப்பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது.