திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியைகளுக்கு, மேற்காசிய நாட்டைத் தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பு இருந்ததாக சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) தெரிவித்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததாக கூறப்படும் நிலையில், மாநில அரசு “ஆப்பரேஷன் துாபான்” என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ள சூழலில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் கூறுகையில், சமீபத்திய சோதனையில் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், மேற்காசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரின் எண்ணை தொடர்பு கொண்டு போதைப்பொருள் கேட்டதாகவும், அந்த நபர் அனுப்பிய க்யூ.ஆர். குறியீடு மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த க்யூ.ஆர். குறியீடு கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியையின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர் ‘சமக்ர சிக்ஷா கேரளா’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் காவ்யா என அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து, மருதோங்கரையைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் நீஷ்மா ஆகிய ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.ஐ.டி. தகவலின்படி, கேரளாவில் போதைப்பொருள் விற்பனைக்கான பணப் பரிவர்த்தனைகளுக்கு கீர்த்தனாவின் க்யூ.ஆர். குறியீடு பயன்படுத்தப்பட்டதாகவும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் கிடைத்ததும், போதைப்பொருள் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ். விவரங்களாகவும் புகைப்படங்களாகவும் வாங்குபவர்களுக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாணவர்களுக்கு விற்பனை செய்ததா, கேரளாவுக்குள் கடத்தி வந்த வழிகள் என்ன என்பதையும், மேலும் டாக்டர்கள் போதைப்பொருள் வாங்கி வினியோகித்ததாக கிடைத்த தகவலையும் எஸ்.ஐ.டி. விசாரித்து வருகிறது.





