ஜூலை 30 காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் கூச்சல், குழப்பம் நீடித்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 20ல் தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடந்ததாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்டவை பார்லிமென்டிலும் எதிரொலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ராஜ்யசபா காலை 11 மணிக்கு அமளிக்கிடையே கூடி நடந்து வருகிறது. அங்கு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசுகையில், அவைத் தலைவர் மூலமாக கூற விரும்புவது என்னவென்றால் எதிர்க்கட்சியின் பங்கு “முழுமையாக எதிர்மறையாகவே” இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து அவையைச் சீர்குலைப்பதும், அவை செயல்படுவதைத் தடுப்பதுமே அவர்களின் கவனமாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.





