பெண்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையினர் ‘வேட்டைக்காரர்களாக’ மாறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது. திருவண்ணாமலை தொடர்பான ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் போது இந்தக் கருத்தை நீதிமன்றம் பதிவு செய்தது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், 2025 செப்டம்பர் 29 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு பல வழிகாட்டுதல்களை வழங்கியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றங்களும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், போலீஸ் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இரவு ரோந்து பணிகளை ஆண்டுதோறும் தமிழக டிஜிபி மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் தலைமை பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கூறப்பட்டது. போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் வழக்கை எடுத்துக்கொண்ட 30 நாட்களில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் ஆறு புதிய சிறப்பு நீதிமன்றங்களை தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுத்து அதன் முன்னேற்ற அறிக்கையை இரண்டு மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டது.