பிரதமர் மற்றும் பிற முக்கிய கணக்குகளின் பதிவுகளை பாதுகாக்க தங்களிடம் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு மெட்டா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 23-ஆம் தேதி, இளம் தலைமுறையினருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் ‘செல்பி’ வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். பின்னர் அந்த வீடியோவை அவர் பேஸ்புக்கிலும் பகிர்ந்தார்; ஆனால் அது திடீரென அங்கிருந்து நீக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமரின் வீடியோ பதிவு ஏன் நீக்கப்பட்டது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மெட்டாவின் உலகளாவிய பொது கொள்கை தலைவருக்கு மத்திய ஐடி அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

பிடிஐ வெளியிட்ட செய்தியின்படி, மெட்டா கடிதத்தில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய கணக்குகளின் உள்ளடக்கங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு, உயர் மட்ட ஆய்வு போன்ற ‘கடுமையான’ பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த வாரத்தின் பிற்பகுதியில் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் மெட்டா குழுவினர் மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.