பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவாதத்தைத் தவிர்க்க முயல்கின்றன என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினார்.
ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய பார்லியின் மழைக்கால கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அலுவல் பணிகளை முடக்கி வருவதாக அவர் கூறினார். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், இரு அவைகளிலும் கடும் அமளி நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பேசிய நட்டா, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து இரு அவைகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதே எதிர்க்கட்சிகளின் கவனமாக இருப்பதாக கூறினார். அவர்கள் முன்வைக்கும் பிரச்னைகளுக்கு ஆதாரம் இல்லை என்றும், கோரிக்கைகளை அடிக்கடி மாற்றுவது வழக்கமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து விவகாரங்களிலும் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும், விவாதம் நடந்தபோதெல்லாம் முறையான பதில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்றும் எதிர்க்கட்சிகள் கோரிய ஒரு விவகாரத்தில் விவாதம் நடைபெற இருந்த நிலையில், அவர்கள் பின்னர் நிலைப்பாட்டை மாற்றியதாக கூறி, அந்த நடத்தையை கடுமையாகக் கண்டித்தார்.





