சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில் குளங்களின் நீர்தரம் சீர்குலையாமல் இருக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை (HR&CE) தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில் குளங்களையும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) படி பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர் பிரசாந்த் பார்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மே 30 அன்று கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தடுப்பு மற்றும் தீர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குளத்தை முறையாக சுத்தம் செய்தல், நீர்தரத்தை அவ்வப்போது கண்காணித்தல், குளத்தின் படிகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றுவதைத் தடை செய்தல், பொதுமக்கள் வருகையை முறைப்படுத்துதல், மீன்கள் மீண்டும் இறப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து துாய்மையை பராமரித்து, கழிவுகளை உரிய நேரத்தில் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீர்தரம் மற்றும் நீர்வாழ் சூழலமைப்பு பாதிக்கப்படாமல் இருக்க, அவ்வப்போது வண்டல் மண் அகற்றுதல், பாசி/நீர்வாழ் களைகள், மிதக்கும் கழிவுகள் உள்ளிட்ட மாசுகளை அகற்றும் பணிகளையும் HR&CE மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.