சென்னை: அ.தி.மு.க.வில் நீடிக்கும் உட்கட்சி பூசல் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் மோதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிருப்தி அணியாக ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருவதாகவும், முன்னாள் அமைச்சர் சண்முகம் தனது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து விலக வைத்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பழனிசாமி 85 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை முடித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் கட்சி செயற்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆறு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தன் பக்கம் இழுத்ததாக கூறப்படுகிறது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பழனிசாமி முயற்சி செய்து வருவதுடன், த.வெ.க. மீது நடவடிக்கை எடுக்க டில்லி தலைவர்களிடமும் பேசிவருகிறார்.

கடந்த 22ஆம் தேதியே அமித் ஷாவை சந்திக்க பழனிசாமி திட்டமிட்டிருந்தாலும், 24ஆம் தேதி அமித் ஷா தமிழகம், புதுச்சேரிக்கு வரவிருந்ததால் டில்லி பயணம் ரத்தானதாக வட்டாரங்கள் கூறின. பின்னர், டில்லியில் ‘நீட்’ விவகார மாணவர் போராட்டம் மற்றும் லோக்சபா கூட்டத்தொடர் காரணமாக அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். இப்போது கூட்டத்தொடர் முடிந்த பின் நேரம் கேட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.