சென்னையில் நடைபெறும் அரசுத் துறை ஆய்வு கூட்டங்கள் இனிமேல் சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளன. முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் முடிவைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில் முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதை அருகிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

அந்த தளத்தில் முன்பு கருத்தரங்கக் கூடமும் உணவருந்தும் கூடமும் இருந்தன. முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டங்கள், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடுகள், அனைத்து கட்சி கூட்டங்கள், கருத்துகேட்பு கூட்டங்கள் ஆகியவை அங்கு நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது கருத்தரங்கக் கூடம் மற்றும் உணவு கூடம் அகற்றப்பட்டுள்ளன. இருக்கைகள், மேஜைகள், ஒலிபெருக்கி அமைப்புகள், டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட உபகரணங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஆய்வு கூட்டங்கள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுகின்றன.

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பான இறுதி ஆலோசனை கூட்டத்தையும் முதல்வர் தலைமையில் கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.