புதுடில்லி: இந்தியா–சீன எல்லைப் பகுதியில் சாலை வசதி இல்லாத 134 கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.2,481.93 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய சாலை இணைப்பை வழங்க 111 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே திட்டத்தின் முன்னேற்றமாக, நாடு முழுவதும் 528 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன; 625 கிராமங்களில் குழாய் வழி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 621 கிராமங்களுக்கு மின்கட்டமைப்பு மூலம் மின்வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் 140 சூரியசக்தி திட்டங்களுக்கும், ஏழு நுண்நீர்மின் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனுடன், மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.238.30 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுடன், அருணாச்சல பிரதேசத்திற்கு 40 நடமாடும் மருத்துவ பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன; பள்ளி உள்கட்டமைப்புக்கான 146 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.





