நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை (மரணமடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில்) குற்றமற்றவர் எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மன் ரத்து செய்யப்பட்டதுடன், விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை என்ற சி.பி.ஐ. நிலைப்பாடும் ஏற்கப்பட்டது.

இந்த வழக்கு, 2005-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஒடிஷாவின் தலபிரா-2 நிலக்கரி சுரங்கத்தை ‘ஹிண்டால்கோ’ நிறுவனத்திற்கு ஒதுக்கிய விவகாரத்தைச் சார்ந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் சுரங்கத் துறையும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., மன்மோகன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்திருந்தது. இருப்பினும், 2015 மார்ச் 11-ல் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் மன்மோகன் சிங் உட்பட ஆறு பேரை ஆஜராக சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2015 ஏப்ரல் 1-ல் மன்மோகன் சிங் ஆஜராகும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மன்மோகன் சிங் தரப்பில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், சுரங்க ஒதுக்கீட்டில் சட்டவிரோதம் இல்லை; இது நிர்வாக முடிவு என வாதிட்டனர். உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் சம்மனை ரத்து செய்து, சி.பி.ஐ. அறிக்கையை ஏற்று, மன்மோகன் சிங்குக்கு எதிரான வழக்கை முடித்து வைத்ததாக தெரிவித்தது.