சென்னை: கோவில் பணிகளுக்கான புதிய டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், இனி அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய ஒப்பந்ததாரர்களுக்கே வாய்ப்பு சுருங்காமல் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், 40 நாட்கள் ஆய்வு செய்து அனைத்து கோவில்களுக்கும் ஒரே மாதிரியான டெண்டர் விண்ணப்பப் படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.
டெண்டர் தொடர்பான ஆவணங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இனி ஹிந்து அறநிலையத்துறையின் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஒப்பந்த புள்ளி கோருதல் முதல் ஏலம் வரை அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெறும் என கூறினார்.
அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி மற்றும் பான் கட்டாயம் எனவும், விலைப்பட்டியல் சரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சரியான விலையில் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க முடியும் என்றார்.
மேலும், கோவில்களில் பார்க்கிங் கட்டணம் இடத்துக்கு இடம் மாறுபடுவதாக புகார்கள் வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், டிஜிட்டல் முறையில் பில்லிங் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர்களும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





