ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும் என கூறினார்.
விவசாயச் சங்கங்கள் மற்றும் ஒரே நிலைப்பாடு கொண்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற துணை நிற்க வேண்டும் என்றும், அரசு தொடர்ந்து செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என விமர்சித்த ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டுவதாகவும், தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு மவுனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஆக.3 அன்று முதல்வர் கர்நாடகா செல்லலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ள நிலையில், மேகதாது விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற சட்டசபை வலியுறுத்தல் நீர்த்துபோகுமா என கேள்வி எழுப்பினார்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் சுமார் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், நிவாரணத் தொகுப்பை காலம் தாழ்த்தாமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.





