கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனங்களை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கும் உத்தரவுகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அந்த உத்தரவுகளை முதல்வர் விஜய் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர் சீனி அகமது மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, அரசு பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கி அரசு உதவியிருக்கலாம்; அது வேலை வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மதுரை கிளை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது.