தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் வளாகங்களிலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் மற்றும் ஜாதி சங்கங்கள் சார்பில் நிகழ்ச்சிகள் அல்லது கூட்டங்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த தடை பள்ளி விடுமுறை நாட்களிலும் பொருந்தும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மத செயல்பாடுகளுக்காக வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பணிகளுக்காக மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி சுவர் மற்றும் வளாகத்தில் அரசியல்/மத சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள், சின்னங்கள் வைப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளில் கட்சி நிர்வாகிகள் ‘ரீல்ஸ்’ எடுப்பது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசாணையை மீறி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள் அரசியல் அல்லது மத நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கையும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.





