சென்னை: உயர்சிறப்பு மருத்துவ சேர்க்கைகளில் தமிழக அரசு மருத்துவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய திமுக ஆட்சியில் அவை பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டுகளில் உயர்சிறப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள் எந்த நிபந்தனையும் இன்றி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். பின்னர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (cut-off) குறைத்து அகில இந்திய தரவரிசை பட்டியல் மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டதால் தமிழக அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கான உதாரணமாக 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதை மறைக்க திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்த ஆண்டு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், அவற்றை உடனடியாக ஒப்படைக்க அரசு மறுத்ததாக அருண்ராஜ் கூறினார். cut-off குறைக்கப்படமாட்டாது என்ற உறுதியான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற நிலைப்பாட்டுடன் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 28.07.2026 தேதியிட்ட உச்சநீதிமன்ற உத்தரவின்படி 151 நிரப்பப்படாத இடங்கள் 29.07.2026 அன்று DGHS-க்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு, அதே cut-off அடிப்படையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இரண்டாம் கட்டத்திற்குப் பிறகும் இடங்கள் காலியாக இருந்து அவற்றை நிரப்ப cut-off குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் தமிழக அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி வழங்கப்பட வேண்டும் என்ற பாதுகாப்பும் உத்தரவாக கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.