தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, தேடுதல் குழு பரிந்துரைத்த குறும்பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அந்த விவகாரத்தை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை எந்த நியமனங்களும் செய்யப்படாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேபோல், காலியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை அமைக்க வேண்டும் என செங்கல்பட்டை சேர்ந்த பாஸ்கர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா ஆஜராகி, மாநிலத்தில் உள்ள 20 பல்கலைகளில் 15 பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல்கலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், உச்ச நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதம் காரணமாக நியமனங்கள் முடங்கி உள்ளதாகவும், தேடுதல் குழு பரிந்துரைத்த மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, தொடர்புடைய வழக்குகளில் விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தது.