சென்னை அருகே உலகத் தரத்தில் ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சூழல் கொண்ட ஏ.ஐ. நகரம் அமைக்கப்படும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் தெரிவித்தார்.

இந்த ஏ.ஐ. நகரத்தில் உலகத் தர ஆராய்ச்சி மையங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் தொழில் துறை வளாகங்கள் ஒரே இடத்தில் இணைக்கப்பட்டு, ஏ.ஐ. வளர்ச்சிக்கான முழுமையான சூழல் உருவாக்கப்படும் என அவர் கூறினார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற “டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் அண்டு டிரான்ஸ்பர்மேஷன்” சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

மேலும், மாணவர்கள் ஏ.ஐ.யை உருவாக்குபவர்களாகவும் வடிவமைப்பாளர்களாகவும் உருவாகும் வகையில் கல்வி அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்றார். தமிழகத்தில் எட்டு மாவட்டங்கள் ஏ.ஐ. வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருவதாகவும், அதை 16 மாவட்டங்களாக விரிவுபடுத்துவது அரசின் இலக்கு என்றும் கூறி, இதன் மூலம் உலகத் தர திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.