மதுரை உள்ளிட்ட தென் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பின்தங்கியுள்ளதாகக் கூறி, தமிழக பட்ஜெட்டில் இப்பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
சங்கத் தலைவர் ரத்தினவேல் கூறுகையில், தமிழகத்தில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி சமச்சீரற்ற நிலையில் இருப்பதாகவும், வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வளர்ச்சிக்காக புதுமையான, ஆக்கப்பூர்வ திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.
மதுரை உட்பட பின்தங்கிய மாவட்டங்களில் இயற்கை வளம், மனிதவளம், தொழில் வாய்ப்புகள், வேளாண் திறன், சுற்றுலா வளம் மற்றும் புவியியல் சிறப்பம்சங்களை ஆய்வு செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ற தனித்துவமான திட்டங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சுற்றுலாப் பொருளாதாரம், வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில், குறு-சிறு-நடுத்தர தொழில்கள், உற்பத்தித் துறை, ஏற்றுமதி, அறிவுசார் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சிக்கும், அனைத்துத் துறைகளுக்குமான திறன் மேம்பாட்டுக்கும் இம்மாவட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரோடு மற்றும் விமான வசதிகள் உள்ளதால் தேசிய, பன்னாட்டு மாநாடுகள், வர்த்தகக் கண்காட்சிகள், தொழில்துறை கண்காட்சிகள் நடத்த ஏற்ற வகையில் மதுரையில் நிரந்தர மாநாட்டு மையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தென் தமிழ்நாட்டில் பாரம்பரிய, ஆன்மிக சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி இயற்கை, பொழுதுபோக்கு, மருத்துவம், கிராமப்புறம், மலைப்பிரதேசம், கடற்கரை மற்றும் கடலோர சுற்றுலாவில் வாய்ப்புகள் உள்ளதாகவும், உள்நாட்டு-வெளிநாட்டு பயணிகள் 2–3 நாட்கள் தங்கி சுற்றிப் பார்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவானால் பகுதி பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்தார்.





