தமிழகத்தின் சட்டப்பூர்வமான காவிரி நீர் பங்கை உறுதி செய்யும் வகையில், காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.
கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், டெல்டா விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் குடிநீர் உரிமையை பாதுகாப்பது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், மேகதாது குடிநீர் மற்றும் சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் காரணமாக காவிரி டெல்டா பாசனம் மற்றும் பிற மாவட்டங்களின் குடிநீர் வழங்கல் பாதிக்கப்படும் என்ற தமிழக அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் ஆட்சேபனைகள் மத்திய அரசின் கவனத்தில் இருப்பதாக கூறியது.
மேலும், கர்நாடக அரசு 2019-ல் சமர்ப்பித்த மேகதாது திட்ட அறிக்கை, காவிரி நீர் விவகாரத் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் நடைமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
அதேபோல், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுமானங்களுக்கு கீழ்நிலை நீர்ப்பங்கீட்டு மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை கர்நாடக அரசு கட்டாயம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தது. திட்டம் தொடர்பான அனைத்து பிரதிநிதித்துவங்களும் உரிய விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியது.





