2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த குடிபோதையிலான விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், ஷாஜி புருஷோத்தமனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலை அருகே நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தவர்களை சொகுசு கார் மோதியதில், முனிராஜ் (13) உயிரிழந்ததாக வழக்கில் கூறப்பட்டது.

இந்த வழக்கு சென்னை ஏழாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 13 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. கடந்த ஜூன் 29 அன்று, குற்றம் சாட்டப்பட்ட ஷாஜியை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்திருந்தது. அவர் ‘எம்பி’ குழுமத் தலைவர் எம்.என். புருஷோத்தமனின் மகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள் அறிவிக்கும் கட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பிடிவாரன்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் உத்தரவை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்று, தண்டனை குறித்த விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அன்றும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

முதுகுத் தண்டுவட பிரச்னை காரணமாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரிய மனுவை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொறுப்பு நீதிபதி ஆர்.கே.பி. தமிழரசி முன் ஷாஜி நேற்று சரணடைந்தார். பின்னர், கொலை செய்யும் உள்நோக்கம் இன்றி மரணம் விளைவித்த குற்றச்சாட்டில் 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10,000 அபராதம்; மற்றொரு குற்றச்சாட்டில் 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவரை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.