காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதில் “எந்த பயனும் இல்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய நிலை இருப்பதாக கூறினார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம் என்றும் அவர் எச்சரித்தார். காவிரி விவகாரத்தில் புதிதாக நடுவர்மன்றம் அமைப்பது தேவையற்றது என்றும் இபிஎஸ் கூறினார்.
கர்நாடக முதல்வர் சிவக்குமார், “விஜயை வரவேற்போம்; ஹெலிகாப்டரில் கர்நாடகாவை சுற்றிப் பார்த்த பின் கருத்து சொல்ல வேண்டும்” என்று கூறியதை சுட்டிக்காட்டிய இபிஎஸ், இதன் பொருள் தண்ணீர் தர மறுப்பதே என விமர்சித்தார். காவிரி ஒழுங்காற்று குழு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டதாகவும், அதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என்று சிவக்குமார் கூறியதாகவும், கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் கூறினார். இந்நிலையில் கர்நாடகா பயணம் பயனளிக்காது என்றும், இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை என்பதை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா நீர் திறக்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். வறட்சி மற்றும் நீர் திறக்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய இபிஎஸ், தொடக்க வேளாண்மை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வரும் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்தார்.




