சீனாவுக்கு முக்கிய தகவல்களை திரட்டி வழங்கியதாக முன்னாள் பிரான்ஸ் கடற்படை விமானி ஹென்றி சூயட் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட பதிலடி நடவடிக்கையில் இந்திய விமானப்படை ரபேல் போர் விமானங்களை பயன்படுத்தியது. அந்த காலகட்டத்தில் சூயட், ரபேல் விமானங்களின் திறனை கேள்விக்குள்ளாக்கியதுடன், சீன விமானங்கள் அவற்றை தாக்கி அழித்துவிட்டதாகவும் கூறினார். இந்த தகவலை இந்தியாவும் பிரான்ஸும் மறுத்திருந்தன.

இந்நிலையில், அவர் கடற்படையில் பணியாற்றிய காலத்தில் அரசுக்கு தெரிவிக்காமல் 2018 செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட் மாதங்களில் சீனா சென்று வந்ததாகவும், அந்த பயணங்களில் தென் ஆப்ரிக்கா விமான நிறுவனம் வழியாக சீன விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளித்து முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பிறகு ஒருமுறை விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸ்–கனடா குடியுரிமை கொண்ட இவர் 2021ம் ஆண்டு வரை கடற்படையில் விமானியாக பணியாற்றி, ரபேல் உள்ளிட்ட பல போர் விமானங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சூயட், சில செமினார்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்ததாகவும், அதுவும் சரியாக அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு உளவு பார்த்தது, நாட்டின் பாதுகாப்பு தகவல்களை கசியவிட்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் 2023 மற்றும் 2025 ஆண்டுகளில் சீனாவுக்கு ராணுவ தகவல்களை பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.