வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினால், நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு முன்பே அவர் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு சட்ட அமைச்சர் அசாதுஜமான் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், வங்கதேசத்தில் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தனது உயிர் குறித்து அஞ்சாமல் வங்கதேசம் திரும்பப் போவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு திரும்புவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர், ஷேக் ஹசீனாவுக்கு நாடு திரும்ப உரிமை இருப்பதாக கூறியபோதும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என வலியுறுத்தினார். வங்கதேச குடிமகளாக சட்டத்தை மதித்து சரண் அடைய அவர் விரும்பினாலும், அதற்கு முன்னரே கைது செய்யப்படுவார்; சட்டம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டு, அவர் எப்படி நாடு திரும்புவார் என்பது ஷேக் ஹசீனாவின் பிரச்னை; அது தன் பிரச்னை அல்ல என்றும் அவர் கூறினார்.