சென்னை கடல் பகுதியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் வழி முனையத்தை (Ship-Borne Terminal) வெற்றிகரமாக சோதித்து, இஸ்ரோ மேலும் ஒரு சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த சோதனை, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) ‘சாகர் மஞ்ஜுஷா’ கப்பலில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
எஸ்.பி.டி. (SBT) எனப்படும் இந்த அமைப்பு, தரைவழி தொலைதொடர்பு நிலையங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் செயல்படும் தளங்களுக்கான கண்காணிப்பு மற்றும் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுடன் தொடர்பை பேண உதவும் கடல்வழி கண்காணிப்பு அமைப்பாக இது செயல்படுகிறது.
இதுவரை பயன்படுத்தப்பட்ட கப்பல் வழி முனையங்களில் வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அதிகமாக இருந்த நிலையில், இஸ்ரோவின் துணை அமைப்பான இஸ்ட்ராக் (ISTRAC) மற்றும் NIOT உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் புதிய முனையத்தை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26 முதல் நடந்த சோதனைகளில் அனைத்தும் வெற்றியடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த முனையம், முப்படைகளின் பாதுகாப்பு சார்ந்த தகவல் பரிமாற்றம், ஏவுகணை தொடர்பான தேவைகள் மற்றும் இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யான் ஆகியவற்றுக்கு நம்பகமான தொலைத்தொடர்பு மையமாக பயன்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெருங்காற்று, மழை, பேரலை போன்ற கடுமையான சூழல்களிலும் செயல்பட்டு, ராக்கெட்டின் பயணத்தை கடலில் இருந்து கண்காணித்து துல்லியமான தகவல்களை தரைவழி தொலைதொடர்பு மையத்துக்கு அனுப்பும் திறன் இதில் உள்ளது. இதன் மூலம் கடல் எல்லைக்கு மேல் பயணிக்கும் ககன்யான் விண்கலத்தின் பாதையை மேலும் துல்லியமாக அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





