மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அதன் தாக்கங்களை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் நாட்டின் முக்கிய எரிபொருள் மற்றும் உரங்களின் தற்போதைய கையிருப்பு நிலை குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஈரான்–அமெரிக்கா மோதல் நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிப்பதால், உலக எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உறுதியளித்தன.

மேற்காசிய பதற்றங்களுக்கு மத்தியில் பணியாற்றும் இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நெருக்கடியால் உருவாகும் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சகங்கள் தெரிவித்தன.

எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். போர் பகுதிகளில் கப்பல்களில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல் வழங்குதல், அவசர உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றுக்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேற்காசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சூரிய ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து எரிசக்தி தற்சார்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிரதமரின் முதன்மை செயலர் பிரமோத் குமார் மிஷ்ராவும் உடனிருந்தனர்.