நாடு முழுவதும் நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், வினாத்தாள் கசிவில் ஈடுபடும் கும்பல்களை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நள்ளிரவில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், பணிக்குழுக்கள் அமைத்தல், விரைவு நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்கள் உருவாக்குதல், மாநிலங்களின் ஆலோசனைகளைப் பெறுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய சவாலாக இருந்து வரும் வினாத்தாள் கசிவு, மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் மத்திய மற்றும் மாநில அளவில் கல்வி அமைப்பில் ஒட்டுமொத்த சீர்திருத்தங்கள் அவசியம் எனவும் கூறினார்.
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வினாத்தாள் கசிவு மாபியாக்களை எந்த காரணத்தாலும் தப்ப விடக்கூடாது என்றும், இதற்காகவே ‘பொது தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா - 2026’ பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு சபைகளிலும் விரிவான விவாதத்துக்குப் பிறகு கடுமையான பிரிவுகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த சட்டம் நம்பகமான தேர்வு முறைக்கான முக்கிய தொடக்கம் என்றும், சீர்திருத்தப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.





