மதுரை

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET SS) தொடர்பாக தமிழக அரசு இனி எந்த புதிய “ரிஸ்க்” எடுக்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தகுதி பர்சன்டைல் குறைய வாய்ப்புள்ளதால் மத்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்த சில சீட்கள் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப வரக்கூடும் என சங்கம் தெரிவித்தது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் சீனிவாசன் கூறுகையில், பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே மொத்தம் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி சீட்களில் 215 சீட்கள் தமிழக அரசு டாக்டர்களுக்காக கிடைத்ததாக குறிப்பிட்டார். முதுநிலை படிப்பு முடித்தவர்கள் தங்களுக்கு விருப்பமான டி.எம்./எம்.சி.எச். துறையைத் தேர்வு செய்ய முயல்வார்கள்; தேவையான நுழைவுத்தேர்வு மதிப்பெண் கிடைக்காவிட்டால் அடுத்தாண்டு மீண்டும் முயற்சிப்பதும் வழக்கம் என்றார்.

50 பர்சன்டைலுக்கு கீழ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் கிடைக்காது என்றும், இந்த ஆண்டு 50 பர்சன்டைல் அளவில் 64 பேர் சீட்களை எடுத்துவிட்டதால் காலியாக இருந்த 151 சீட்கள் மத்திய இடஒதுக்கீட்டிற்காக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த கவுன்சிலிங்கில் தகுதி பர்சன்டைல் 50-இலிருந்து 40 ஆக குறைந்தால் அகில இந்திய அளவில் இடங்கள் நிரப்பப்பட்டு, மீதமுள்ள இடங்கள் தமிழக அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்படலாம் என அவர் கூறினார். உதாரணமாக, 151 இடங்களில் 51 இடங்கள் காலியாக இருந்தால் அதில் 50% என 25 இடங்கள் மீண்டும் தமிழகத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் விளக்கினார்.

மேலும், தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி முடித்த பல டாக்டர்கள் அரசு மருத்துவமனைகளில் தங்கள் படித்த துறைகளில் பணியிடம் இல்லாததால் வேறு துறைகளில் பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி முடித்தவர்களை உடனடியாக பணியில் சேர்க்க 350 கூடுதல் உதவி பேராசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசிடம் சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.