பழநி கோவில் நில மோசடி தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்ய பத்திரப்பதிவு துறை 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் ஜூலை 6 அன்று தனிநபர்களின் பெயரில் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிலங்கள் கண்காணிப்பாளர் முருகானந்தம் ஜூலை 15 அன்று சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி உட்பட நால்வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை ஆகஸ்ட் 12 வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் சார் பதிவாளராக பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பதிவு செய்த அனைத்து நில ஆவணங்களையும் சிறப்பு தணிக்கை செய்ய குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





