சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில் பார்சல் எடுத்துச் செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 1,000 பஸ்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினமும் 21,515 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், இக்கழகங்களுக்கு ரூ.43,865 கோடி கடன் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் பிற வழிகளில் வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அதிகாரிகள் கூறினர். காலி இடங்களை நீண்டகால குத்தகைக்கு விடுதல், சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டங்கள், பஸ் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

உடனடியாக செயல்படுத்தும் திட்டமாக, வெளியூர் அரசு விரைவு பஸ்களில் பார்சல் புக்கிங் வசதி தொடங்கப்படுகிறது. பயணத்தின் போது கையில் எடுத்துச் செல்ல முடியாத பெரிய பொருட்கள் மற்றும் லக்கேஜ்களை பார்சலாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்ல முடியும்.

இதற்காக புதிய பஸ்களின் பின்பகுதியில் பார்சல்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்; கட்டணம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் 1,000 அரசு விரைவு பஸ்களில் முதற்கட்டமாக இது அமல்படுத்தப்பட உள்ளது.