டாஸ்மாக் தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை முன்ஜாமின் வழங்கியது. மேலும், அவர் தனது பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, செந்தில் பாலாஜி உட்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக பார்கள் நடத்துதல் மற்றும் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் இதில் இடம்பெற்றுள்ளன; பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாகவும் கூறி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட இந்த மனுவில், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கைது செய்ய இடைக்கால தடை விதித்து, முன்ஜாமின் வழங்கியது. அதே நேரத்தில், பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.





