உலோக துகள்கள் அடங்கிய ‘பெல்லட்’ குண்டுகளை முழுமையாகத் தடை செய்யக் கோருவதற்குப் பதிலாக, அவற்றை பயன்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் (கோடு ஆஃப் கண்டக்ட்) உருவாக்கக் கோரி மனுவை திருத்துமாறு உச்ச நீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு, இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து டில்லியில் நடைபெற்ற பெரிய அளவிலான போராட்டத்தைத் தொடர்ந்து எழுந்தது. பார்லிமென்ட் நோக்கி முற்றுகை முயற்சியின் போது போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது உலோக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் பலர் கடுமையாக காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
முன்னாள் மத்திய தகவல் ஆணையரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான யஷோவர்தன் ஆசாத் உள்ளிட்டோர் மற்றும் காயமடைந்த இருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெல்லட் குண்டுகள் துப்பாக்கியில் இருந்து வெளியேறும்போது பரவலாகச் சிதறி கண்கள், கைகள், கால்கள் உள்ளிட்ட உடல் பகுதிகளில் துளைத்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதிக விசை கொண்ட ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை இன்றி முதலில் கண்ணீர் புகை, பின்னர் தடியடி, இறுதியாக பெல்லட் குண்டுகள் என படிப்படியாக வலிமை உயர்த்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
நேற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) அமர்வில் விசாரணை நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், காயமடைந்த பிரஷாந்த் குமார் மற்றும் ஷேக் இர்ஷத் மன்சூரி ஆகியோருக்கு டில்லி அரசு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், பெல்லட் குண்டுகளுக்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதற்கு நீதிபதி ஜாய்மால்யா பக்சி, சட்ட அமலாக்கத் துறையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் போலீஸ் விதிமுறைகளையே எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்தார். அதற்கு குரோவர், சம்பந்தப்பட்ட விதிகளை கண்டறிதல் எளிதல்ல என்பதால் அவற்றை நீதிமன்றத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், பெல்லட் குண்டுகள் ஆயுத களஞ்சியத்தில் இருக்கக் கூடாது என்று அல்ல; பொதுமக்கள் மீது பயன்படுத்தக் கூடாது என்பதே வலியுறுத்தல் என்றும், காயமடைந்தவர்களின் உடலிலிருந்து உலோக துகள்கள் அகற்றப்பட்டுள்ளதால் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.





