பெங்களூரு: காவிரி நீர் விவகாரத்தை முன்னிட்டு கன்னட அமைப்புகள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், கடந்த ஆண்டு நல்ல மழை காரணமாக நீர் திறக்கப்பட்டதாகவும், தேவையான அளவை விட அதிகமாக நீர் வழங்கியதாகவும் கூறினார். மழையின்மை காரணமாக கடுமையான சூழல் நிலவும் போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி கபினி அணையில் 83 சதவீதமும், கேஆர்எஸ் அணையில் 36 சதவீதமும் நீர் இருப்பு உள்ளதாக அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், கர்நாடக நலன்களை பாதுகாக்க ஒருமித்த முடிவில் இருப்பதாகவும் தெரிவித்தார். நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக கர்நாடகா வர உள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த விவகாரம் குறித்து முறையிட உள்ளதாகவும் கூறினார்.
தமிழக முதல்வர் விஜயுடன் பேசியதாக கூறிய சிவகுமார், விஜய் கர்நாடகா வரலாம் என்று தெரிவித்தாலும் அது இன்னும் உறுதியாகவில்லை என்றார். ஆகஸ்ட் 3-ம் தேதி முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றமான சூழலில் விஜய் வந்தால் போராட்டங்களை சமாளிப்பது கடினமாகும் என்றும், மாநிலத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார். கன்னட அமைப்புகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படாத வகையில் தீர்வு காண முயற்சிப்போம் என்றும் கூறிய அவர், வரும் நாட்களில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.





