சென்னை: பல துறைகளில் அதிகாரிகள் அலுவலகப் பணிக்காக மட்டுமல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட அரசு கார், ஜீப்களை பயன்படுத்துவதால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 41 அரசு துறைகளின் பயன்பாட்டிற்காக 15,000-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் ஜீப்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அலுவலக பயன்பாட்டிற்கு மகேந்திரா ‘பொலிரோ’, கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மகேந்திரா எக்ஸ்.யு.வி. 300 போன்ற வாகனங்கள், உயரதிகாரிகளுக்கு டொயோட்டா ‘இன்னோவா கிரிஸ்டா’, ‘ஹோண்டா சிட்டி’ போன்ற சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

பெட்ரோல் வாகனங்களுக்கு மாதம் 165 லிட்டரும், டீசல் கார் மற்றும் ஜீப்களுக்கு மாதம் 125 லிட்டரும் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு வாகனங்களின் பெட்ரோல், டீசல் செலவுக்கே மாதந்தோறும் சுமார் ரூ.25 கோடி செலவாகிறது என கூறப்படுகிறது.

ஆனால் பல துறைகளில் ஒரே அதிகாரிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, நீர்வளத் துறையில் செயலர் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் பல கார்கள் இருப்பதாகவும், மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் பிற பொறியாளர்களின் அலுவலகம்/வீடுகளில் கூடுதல் கார்கள், ஜீப்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு வாகனங்களை சொந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவது, ஒதுக்கீட்டைவிட குறைவாக எரிபொருள் பயன்படுத்தும் நிலையில் கூட போலி ‘பில்’ போட்டு பணம் எடுப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தேவையற்ற நிர்வாகச் செலவுகளை குறைக்க கூடுதல் வாகனங்களை திரும்பப் பெறவும், கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்தவும் அவசியம் என அறிக்கை வலியுறுத்துகிறது.