மதுரை
ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் ‘இதரப்பணி’ என்ற பெயரில் தவறாக சலுகை பெற முடியாத வகையில் போக்குவரத்து கழக நடைமுறைகள் மாற்றப்பட்டதை அரசு பஸ் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், விபத்து அல்லது மருத்துவ காரணங்களால் உடற்தகுதி இழந்தவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுப்பணி முறையில் இன்னும் முழுமையான சீர்திருத்தம் தேவை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மார்ச் 5 அன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஆளுங்கட்சி சங்கங்களைச் சேர்ந்த நடத்துநர், ஓட்டுநர்களுக்கு ‘இதரப்பணி’ என்ற பெயரில் நிர்வாகப் பணிகளை வழங்கக் கூடாது என உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, பணிமனைகளில் அந்த இடங்களை விபத்து அல்லது உடல்நலக் காரணங்களால் பணிக்கு தகுதி இழந்த ஓட்டுநர், நடத்துநர்களை வைத்து நிரப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்கள் கூறுகையில், முன்பு மாற்றுப்பணி நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டதால் சிலர் பணிக்கு வராமல் சம்பளம் பெற்றதாகவும், இதனால் துறைக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். நீதிமன்ற தீர்ப்பால் ஒரு தீர்வு கிடைத்தாலும், தங்களுள் பலர் பத்தாம், பிளஸ் 2 வரை மட்டுமே படித்தவர்கள் என்பதால் திடீரென கணினி சார்ந்த பணிகளுக்கு மாற்றப்படுவது சிரமமாக இருப்பதாகவும், லட்சக்கணக்கான பணத்தை கையாள வேண்டிய சூழல் பயத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புதல், வாகன பராமரிப்பு சார்ந்த உதவி, அலுவலக உதவியாளர் போன்ற பல பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றையும் மாற்றுப்பணிக்கான வாய்ப்பாக பரிசீலிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். போக்குவரத்து உயரதிகாரிகள், கை-கால் இழப்பு அல்லது நீண்ட நேரம் நிற்க முடியாத நிலை போன்ற உடற்தகுதி குறைபாடுகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து மாற்றுப்பணி வழங்கப்படுவதாகவும், நடத்துநர்களுக்கு தினசரி கணக்கு வழக்கில் அனுபவம் இருப்பதாகவும் தெரிவித்தனர். கணினியில் ஐகான்களை ‘கிளிக்’ செய்து டிக்கெட் விற்பனை விவரம் உள்ளிட்ட எளிய பதிவுகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மகளிர் இலவச பயணம், இ-டிக்கெட் போன்ற காரணங்களால் பணம் எண்ணும் பணிச்சுமை குறைந்துள்ளதாகவும், பணம் எண்ணும் இயந்திர வசதியும் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.





