மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ‘லோகமான்ய திலக் தேசிய விருது’ வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது புதிய உற்சாகத்தை அளிக்கும் என தெரிவித்தார். குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே அஜித் தோவலைத் தெரிந்ததாகவும் அவர் கூறினார்.

குஜராத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் விசாரணை தொடர்பாக, நாடு முழுவதும் நடந்த குண்டுவெடிப்புகளையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என தோவல் பரிந்துரைத்ததாக ஷா நினைவுகூர்ந்தார். இதையடுத்து, தோவலை அழைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தோவல் வழங்கிய தகவல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், குஜராத் போலீசார் ஆமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கை மட்டுமின்றி, நாடு முழுவதிலும் நடந்த 13 குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் தீர்வு கண்டதாக ஷா கூறினார். மேலும், 2014ல் மோடி பிரதமரானபோது முதன்மைச் செயலாளரை நியமிப்பதற்கு முன்பாகவே தோவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகத் தேர்ந்தெடுத்ததாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பில் அவரது பங்கு முக்கியமானதாகவும் அவர் குறிப்பிட்டார்.