வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர், நோயாளியின் மூக்குத் துவாரங்கள் வழியாக மூளை கட்டியை வெற்றிகரமாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படை பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஆண்டி ஆர்ச்சருக்கு கடந்த 15 ஆண்டுகளாக கடுமையான தலைவலி இருந்ததாகவும், பின்னர் பார்வை குறைபாடும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பரிசோதனையில், மூளையின் அடிப்பகுதியில் பிட்யூட்டரி சுரப்பி அருகே 4.4 செ.மீ. அளவில் கட்டி இருந்து, பார்வை நரம்பை அழுத்துவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து வாஷிங்டன் அருகேயுள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் அவர் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணரான மேஜர் ஜகத்குமார் படேல் சிகிச்சையை முன்னெடுத்தார்; நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கர்னல் சார்லஸ் மில்லர் உதவினார்.
வழக்கமாக மண்டை ஓட்டை திறக்கும் முறைக்கு பதிலாக, எண்டாஸ்கோபி கேமரா உதவியுடன் மூக்குத் துவாரங்கள் வழியாக கட்டியை அணுகி அகற்றியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகும், இரண்டு நாட்களில் எந்த சிரமமும் இன்றி ஆர்ச்சர் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
புதிய மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவ குழுவினரை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.





