மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையாக ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் விடுவிக்கப்படும் தொகையுடன் கூடுதலாகவும் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மாநில அரசுகளின் மூலதனச் செலவினங்கள் மற்றும் மேம்பாட்டுச் செலவுகளை விரைவுபடுத்துவதற்காக இந்த கூடுதல் நிதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுவிப்பில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி வழங்கப்பட்டுள்ளது. பீஹாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.7,866 கோடி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும் மஹாராஷ்டிராவுக்கு ரூ.7,022 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.6,460 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு ரூ.4,819 கோடி, ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடி விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு இந்த விடுவிப்பில் ரூ.4,466 கோடி வழங்கப்பட்டுள்ளது.